சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள்
கிருஷ்ணராயபுரம், ஆக. 4: கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான விதை நெல்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் விதை ரகங்களான ஆந்திராபொன்னி(BPT 5204), ADT 54, Co 50 ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆந்திரா பொன்னி, ஆகியவை நடுத்தர சன்ன இரகங்கள், சிஓ 50 அரிசி சற்றுப்பெரியது. வயது 125 முதல் 130 நாட்கள் கொண்டது. மேற்கண்ட நெல் ரகங்கள் மாயனூர் வேளாண்மை விரிவாக்க மையத்திலும், பஞ்சப்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இவற்றை மானிய விலையில் பெற்று பயன்பெறவேண்டும். நெல் வாங்க வரும் விவசாயிகள் ஆதார் அட்டை, பட்டா நகலை எடுத்து வரவேண்டுமென கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.