கரூரில் 41 பேர் பலியான சம்பவம்; முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மிவா பென்சனர் சங்கம் ரூ.5,000
குளித்தலை, செப்.30: கரூரில் நடந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மின்வாரிய பென்சனர் சங்கம் சார்பில் ரூ.5,000 வழங்கப்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய்யை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் உள்பட பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காலை முதலே காத்துக்கிடந்தனர்.
ஆனால் விஜய் வருகை தாமதமானதால் குடிக்க தண்ணீரின்றியும், பசியாலும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
பின்னர் மாலையில் விஜய் வந்ததும் அவரை பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கிக்கொண்ட ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் சிலர் உயிரிழந்தனர். அதேபோல் கூட்டநெரிசலில் சிக்கி உயிருக்குப்போராடிய பலரை அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்கம் தலைவர் பொன்னம்பலம் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ .5,000 அனுப்பி வைக்க தீர்மானித்து அதற்கான தொகையையும் அனுப்பி வைக்கப்பட்டதாக பொன்னம்பலம் தெரிவித்தார்.