நவம்பர் 30ம் தேதி மாவட்ட அளவிலான தடகள போட்டி
கரூர், நவ. 28: கரூர் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டி நவம்பர் 30ம் தேதி தான்தோன்றிமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மாணவிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் செல்வம் மற்றும் தடகள சங்க செயலாளர் பெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து ஒன்றிய அரசின் மேற்பார்வையில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை உலக அளவிலும், ஒலிம்பிக் அளவிலும் பங்கேற்க செய்து வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி அஸ்மிதா என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட பெண் வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் இருந்து கரூர் உட்பட 300 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாடு தடகள சங்க வழிகாட்டுதலுடன் கரூர் மாவட்டம் அளவிலான இந்த தடகளப் போட்டிகள் வரும் நவம்பர் 30ம் தேதி கரூர் தான்தோன்றி மலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
வயது வரம்பு: 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் 21.12.2011 முதல் 20.12.2013 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் 21.12.2009 முதல் 20.12.2011 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும்14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு டிரையத்லான் பிரிவு எ,பி,சி மற்றும் கிட்ஸ் ஜாவலின் என 4 போட்டிகளும், 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு 60மீ, 600மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என 7 போட்டிகள் நடைபெறுகிறது. போட்டி சம்பந்தமான விவரங்களுக்கு கரூர் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் பெருமாள் 9443410009: இணைச் செயலாளர் மகேந்திரன் 9751003607. மேலாளர் ராஜ்குமார் 9655697755 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.