கரூர் மாவட்டத்தில் நடப்பு பருவ சம்பா பயிர் காப்பீடு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு
கரூர், நவ. 28: கரூர் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டின் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம்தேதி வரை அவகாசம் அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டின் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம்தேதி வரை அவகாசம் அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், கரூர் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கபட்ட பஜாஜ் பொது காப்பீட்டு நிறுவனம் சென்னை நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சிறப்பு பருவம் 2025 ஆண்டிற்கு கரூர் மாவட்டத்தில் நெல்&11, மக்காச்சோளம் பயிர்களும், ராபி பருவம் 2025 ஆண்டுக்கு நிலக்கடலை, சோளம், கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு பருவ பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் வேளாண் பயிர்களை பொறுத்தவரையில் சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ. 570.57, மக்காச்சோளம் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ. 474.24 காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். ராபி பருவ பயிர் காப்பீட்டு தொகையில் சோளம் பயிர் ஒரு ஏக்கருக்கு ரு. 107.94, நிலக்கடலை ரூ. 49202, கரும்பு பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ. 1304.16 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதியாக சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு வரும் 2025 நவம்பர் 15ம்தேதியும், மக்காச்சோளம் பயிருக்கு டிசம்பர் 2ம்தேதியும், ராபி பருவத்தில் சோளம் பயிருக்கு டிசம்பர் 16ம்தேதியும், நிலக்கடலை பயிருக்கு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதியும், கரும்பு பயிருக்கு 2026ம் ஆண்டு மார்ச் 31ம்தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இவற்றில் சிறப்பு பருவத்தில் சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமீயத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதுடன் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிடப்பட்டள்ள பயிர், கிராமம் ஆகியவற்றினை சரிபார்த்து காப்பீடு செய்யும் இடங்களான பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி செய்த பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் முன்கூட்டியே தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ, வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் அறிவிக்கை செய்த பகுதிகளில் பயிர்களை பயிர் காப்பீடு செய்து பயனடையலாமென அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.