கரூர் மாவட்ட ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு
கரூர், அக். 25: ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்புள்ளது. இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்,13. நாள் 13.10.2025-ல் மேற்கொள்ளவிருக்கும் மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகர்நிலை மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும். மத்திய / மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும்.
இப்பணிக்காக நிகர்நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை தகுதி நியமன முறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) விண்ணப்பிக்கலாம். கரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான ஹஜ் ஆய்வாளர்கள், மேற்கண்ட இணைய முகவரியில் 03.11.2025 - க்குள் விண்ணப்பிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.