புரட்டாசி, மகாளய அமாவாசை மீன், சிக்கன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது
கரூர், செப். 22: புரட்டாசி மாதம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கரூர் மாநகர பகுதிகளில் நேற்று மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.புரட்டமாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இந்துக்கள் விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, சைவ உணவுகள் சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.அதன்படி, இவ்வாண்டு புரட்டாசி மாதம் கடந்த புதன்கிழமை பிறந்தது. வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கடைகள், இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்றுமுன்தினம் புரட்டாசி சனிக்கிழமை, அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசை தினத்தன்று வந்ததால் கரூர் மாநகர பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.