கரூர் அரசுப்பள்ளியில் பயிலும் 813 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
கரூர், டிச.12: கரூர் அரசுப்பள்ளியில் பயிலும் 813 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ செந்தில்பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாவர்களுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
மாணாவர்களுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கி எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணிகள், புத்தகப்பைகள், சைக்கிள்கள், பேருந்து பயண அட்டை, கணித உபகரணப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் இப்படி பல்வேறு சிறப்புத் திட்டங்களையும், மேலும் அரவக்குறிச்சியில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் தரகம்பட்டியில் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் கரூர் மாவட்டத்திற்கு வழங்கி உள்ளார்கள். 2025-26 ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.46,767 கோடி நிதியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி நிதியும் என மொத்தம் 55,261 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்கான பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் மாந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2919 மாணவர்களுக்கும், 3853 மாணவிகளுக்கு என மொத்தம் 6772 மாணாக்கர்களுக்கு சைக்கிள்கள் வழங்கபடவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் கரூர் மாவட்டம், காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 386 மாணவிகளுக்கும், பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 78 மாணவிகளுக்கும், விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 41 மாணவர்களுக்கும், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 123 மாணவிகளுக்கும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 93 மாணவிகளுக்கும், வாங்கல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 41 மாணவர்களுக்கும் மற்றும் வாங்கல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 51 மாணவிகளுக்கும் என மொத்தம் 813 மாணாக்கர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.மேலும், 10 ம் வகுப்பைச் சேர்ந்த 7872 மாணாக்கர்களுக்கும், 12ம் வகுப்பைச் சேர்ந்த 6502 மாணவ மாணவியர்களுக்கும் வினா விடை வங்கி புத்தகங்களை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை) இளங்கோ (அரவக்குறிச்சி), மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜீ, மண்டலக்குழு தலைவர்கள் ராஜா, கனகராஜ், .அன்பரசன், சக்திவேல், கரூர் வட்டாட்சியர் மோகன் ராஜ், பள்ளி ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.