கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்திய 30 பேர் கைது
கரூர், ஆக. 12: கரூர் கலெக்டர் அலுவலகம் முன் வீட்டுமனை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய 30 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலை, அகில இந்திய தொழில்சங்க மய்ய கவுன்சில் (ஏஐசிசிடியூ) ஆகிய அமைப்புகளின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். சொந்த வீடற்ற மக்கள் வீட்டுமனை கேட்டு கொடுத்த மனுக்கள் ஆண்டுக்கணக்காக கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்கள்மீது தாமதமிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்றனர்.போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.