நாகர்கோவிலில் விளம்பர,கட்சி பேனர்கள் அகற்றம் அதிகாரிகளுடன் முன்னாள் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
நாகர்கோவில், நவ.29 : நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள், அரசியல் கட்சி பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. இதில் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அவரது மகள் கவுன்சிலர் லிஜா ஆகியோர் வைத்திருந்த பேனர்களும் சவேரியார் ஆலயம், செட்டிகுளம் பகுதிகளில் அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் சவேரியார் ஆலய பகுதிக்கு சென்றார். அங்கே விளம்பர பேனர்கள் அகற்றுகின்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விளம்பர பேனர்களை அகற்றக்கூடாது. முறைப்படி அனுமதி பெற்று தான் வைத்து உள்ளோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேனர்களை அகற்றுகிறீர்கள் என்று கூறினார். ஆனால் அதிகாரிகள் பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பல்வேறு விதிமுறைகளை நீதிமன்றம் வகுத்துள்ளது. அதை மீறி யாருக்கும் அனுமதி கிடையாது. இதனால் அகற்றுவதாக கூறினார்கள். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.