ஊரம்பில் போதையில் வாலிபர்கள் கோஷ்டி மோதல்
நித்திரவிளை, நவ. 27: ஊரம்பு சந்திப்பு பகுதியில் உள்ள ஒட்டலில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சங்குருட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் மது போதையில் அமர்ந்து பிரைடு ரைஸ் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறி 2 கோஷ்டிகளாக பிரிந்து சாலையில் இறங்கி ஒருவரையோருவர் தாக்க துவங்கினர். இதை பார்த்த உள்ளூர்வாசிகள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியாத நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த இரவு ரோந்து போலீசார் 2 கோஷ்டியினரையும் அந்த பகுதியில் இருந்து துரத்தி விட்டனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்கள் விட்டு சென்ற சொகுசு காரை எடுத்து, கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் முனுஸ் கொடுத்த புகார் மீது சூழால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30), பின்குளம் பகுதியை சேர்ந்த ஜாண் (48), சங்குருட்டி காலனியை சேர்ந்த ஆதித்தியன் (20), மணிகண்டன் (24) ஆகியோர் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.