கொல்லங்கோடு அருகே சானல் பக்கச்சுவர் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி
நித்திரவிளை, செப். 27: கொல்லங்கோடு அருகே நடைக்காவு ஊராட்சி பகுதியான மணலி - குரங்காடி - சாத்தன்கோடு சாலையின் பக்கவாட்டில், நெய்யார் இடதுகரை கிளை கால்வாய் செல்கிறது. இதில் தெற்கே முள்ளுக்கோடு என்னுமிடத்தில் கால்வாயின் பக்க சுவரில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, சானலில் வரும் மழைநீர், இந்த உடைப்பு வழியாக சானலில் கீழ் பகுதியில் உள்ள ஷீட்டால் ஆன 5 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் துணிகள் அனைத்தும் சேதமடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்தால், சானலில் கீழ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே நெய்யார் இடதுகரை கிளை கால்வாயை பராமரிப்பு செய்யும் பொதுப்பணித்துறையினர், சானல் பக்கச்சுவர் உடைப்புகளை சரி செய்து, அந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு தூர்வாரி சீர் செய்ய வேண்டும் என பாதிப்புக்குள்ளான குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.