பத்தனம்திட்டா அருகே மூதாட்டி உடலை தகனம் செய்ய முயன்றபோது தீயில் கருகிய பேரன்கள்
திருவனந்தபுரம், ஆக.27: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி அருகே இளம்பிலாசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி(80). இவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் அருகில் உள்ள ஜண்டாயிக்கல் எரிவாயு மயானத்தில் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. உடல் மயானத்தில் வைக்கப்பட்ட பின்னர் ஜானகியின் பேரன் ஜிஜோ (41) உடலுக்கு அருகே சிரட்டையில் கற்பூரம் வைத்து தீ கொளுத்தினார். அப்போது திடீரென தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் ஜிஜோ, அவரது தம்பி ராஜேஷ் குமார் (40), நண்பர் பிரதீப் (40) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.இவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக கற்பூரத்தில் தீ வைத்த பின்னர் தான் எரிவாயு திறந்து விடப்படும். ஆனால் அதற்கு முன்னரே எரிவாயுவை திறந்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மயான நிர்வாகிகள் கூறினர்.