மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்
நாகர்கோவில், அக். 24: குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மூலதட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி கில்டர்(48). இவர் நேற்று முன்தினம் அவரது ஒரு வயது மகளை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக அழைத்து வந்தார். சிகிச்சைக்காக குழந்தையை மேரி கில்டர் கையில் வைத்துகொண்டு வெளியே காத்திருந்தார். அப்போது குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மேரி கில்டர் கழிவறைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து குழந்தையை மேரி கில்டர் வாங்கிக்கொண்டார். சிறிது நேரம் கடந்த பிறகு குழந்தையின் கையை பார்த்துள்ளார். கையில் இருந்த 2 கிராம் தங்ககாப்பு மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடினார். தங்ககாப்பு கிடைக்கவில்லை. இது குறித்து மேரி கில்டர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தையை பெண்ணிடம் கொடுத்து சென்றபோது, அந்த பெண் காப்பை கழற்றிச்சென்றாரா? அல்லது காப்பு குழந்தையின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.