புத்தளத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
நாகர்கோவில், நவ.21: புத்தளம் எல்.எம்.பி.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (22.11.2025) நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் நாளை (சனிக்கிழமை) புத்தளம் பேரூராட்சி மற்றும் மணக்குடி, பள்ளம்துறை, ஆத்திக்காட்டுவிளை, மேலகிருஷ்ணன்புதூர், பறக்கை ஆகிய ஊராட்சிகள் மற்றும் தெங்கம்புதூர் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தளம் எல்.எம்.பி.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.