களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தகவல் மையம் திறப்பு
திருவட்டார், நவ.19: சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக குமரி மாவட்ட அறநிலையத் துறை சார்பில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் களியக்காவிளை வழியாக சென்று வருகின்றனா். இதே போன்று குமுளி, புளியரை பகுதி வழியாகவும் சபரி மலைக்கு செல்கிறார்கள். குமரி வழியாக வரும் பக்தர்கள் வசதிக்காக களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை குழித்துறை தேவஸ்சம் கண்காணிப்பாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இங்கு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அறநிலையத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி புரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மையம் 2026 ஜனவரி 20ம் தேதி வரை செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அதிகாரி தெரிவித்துள்ளார்.