நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு அதிமுக - ஓ.பி.எஸ். அணி திடீர் வாக்குவாதம் போலீஸ் சமரசம்
நாகர்கோவில் அக்.18 : அதிமுகவின் 54 ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் சுகுமாறன், அட்சயா கண்ணன், ஜெயசீலன், கவுன்சிலர்கள் லிஜா, அனிலா, ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அந்த சமயத்தில் ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையிட வந்தனர். அப்போது அவர்கள் சிலையின் முன் பகுதியில் சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி - அதிமுக என்று இருந்த போர்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கு நின்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை நோக்கி பாய்ந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் திடீரென காரில் இருந்து இறங்கி ஆவேசமாக பேசிக் ெகாண்டு வந்தார். உடனடியாக அந்த பகுதியில் நின்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாலை அணிவித்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.