பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
புதுக்கடை, நவ.13 : புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (60). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அஜின் (30) என்பவர் ரவீந்திரன் கடையில் சென்று பொருட்கள் கேட்டுள்ளார். அப்போது ரவீந்திரன் அதற்கான பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜின் வீட்டிற்கு சென்று ஒரு கம்பை எடுத்துக் கொண்டு வந்து அவதூறாக பேசி, கடை உரிமையாளர் ரவீந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவரது தலை உட்பட உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த ரவீந்திரன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் அஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஜின் மீது ஏற்கனவே புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.