நித்திரவிளை அருகே வாகனம் மோதி சேதமடைந்த உயர் அழுத்த மின்கம்பம் மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நித்திரவிளை, அக். 13: நித்திரவிளை அருகே பணமுகத்திலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில், முரப்பு என்னுமிடத்தில் நிற்கும் உயர் அழுத்த மின்கம்பத்தில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அப்பகுதி வழியாக சென்ற கடத்தல் வாகனம் ஒன்று மோதியது. அப்போது மின்கம்பத்தின் கீழ் பகுதி உடைந்துள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள், நம்பாளி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே நம்பாளி மின் அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.
அதன் பிறகு வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவோ, மின் கம்பத்தை மாற்றி அமைக்கவோ இல்லை. இந்த மின்கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பி மற்றும் வீட்டு இணைப்பிற்கான மின்கம்பி ஆகியவை செல்கிறது. வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் போது ஏற்படும் காற்று காரணமாக, மின்கம்பம் முறிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நம்பாளி மின்வாரிய அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்ட மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.