கன்னியாகுமரியில் 4வது நாளாக படகு சேவை தாமதம்
கன்னியாகுமரி, ஆக. 13: கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீர் மட்டம் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. 10 மணியளவில் கடலில் நீர் மட்டம் சகஜ நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து, படகு சேவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர். இது போன்று கடந்த 3 நாட்களாக படகு சேவை தாமதம் ஆனது. தொடர்ந்து 4வது நாளாக படகு சேவை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.