மணவாளக்குறிச்சி அருகே பைக் மீது லாரி மோதி 2 பேர் படுகாயம் டிரைவர் மீது வழக்கு
குளச்சல், டிச.11: கடியப்பட்டணம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் பீட்டர் சேவியர். மீனவர். அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (33). நண்பர்களான இவர்கள் இருவரும் பைக்கில் திங்கள்நகர் அருகே உள்ள நிலவடி குளத்துக்கு குளிக்க சென்றனர். பைக்கை பீட்டர் சேவியர் ஓட்டினார். கிளிண்டன் பின்னால் அமர்ந்து சென்றார். வெள்ளமோடி என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து வந்த கிளிண்டன் தலையில் படுகாயம் அடைந்தார். பீட்டர் சேவியர் லேசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் கிளிண்டனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பீட்டர் சேவியரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக திங்கள்நகர் அருகே உள்ள மொட்டவிளையை சேர்ந்த ராஜேஷ் (44) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.