ஆப்ரிக்கா எடன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் அருணாச்சலா பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
நாகர்கோவில், ஆக. 9: வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி, ஆப்ரிக்காவின் சாம்பியாவில் உள்ள எடன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை எடன்பெர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் முனைவர் சேம்சங் மற்றும் அருணாச்சலா கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் கிருஷ்ணசுவாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் படி இங்குள்ள மாணவிகள் எடன்பெர்க் பல்கலைகழகத்தில் உயர்கல்வி மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயில முடியும். புதிய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றுவது, பல்வேறு புதிய ஆலோசனை குழுக்களில் இடம் பெறுவது, பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் பரிமாற்றம், அதுபோல் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் இணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற முடியும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் தருண்சுரத், முதல்வர் முனைவர் ஜோசப் ஜவகர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.