தி.மு.க. அயலக அணி சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி பாபு வினிபிரட் தலைமையில் நடந்தது
நாகர்கோவில், ஆக. 9: குமரி மாவட்டத்தில் தி.மு.க. அயலக அணி சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாபு வினிபிரட் தலைமையில் நடந்தது. தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் கருணாநிதியின் நினைவுநாள் நிகழ்ச்சி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்தது. மேலும் திமுக அயலக அணியின் துணை செயலாளர் பாபு வினிபிரட் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக பாபு வினிபிரட் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து குளச்சல் அண்ணாசிலை எதிரில் திமுக அயலக அணி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு பாபு வினிபிரட் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் நாகூர்கான், நகரசபை தலைவர் நசீர், மகளிர் அணியை சேர்ந்த லதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கும் பாபு வினிபிரட் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் அகமதுஷா, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேறு சில இடங்களிலும் அயலக அணி சார்பில் கருணாநிதி உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.