மாநில அளவிலான திருந்திய நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் போட்டி
நாகர்கோவில், ஆக.8: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான’ விருது சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கு பெற குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும். குத்தகைதாரர்களும் கலந்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவுக்கட்டணம் ரூ.150 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைப்படம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.