ஈத்தாமொழி அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது
ஈத்தாமொழி, ஆக.8: ஈத்தாமொழி காவல் நிலையச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார், தனிப்பிரிவு காவலர் ஆகியோர் அந்த பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் ஈத்தாமொழி காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு பிலாவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பிலாவிளை பகுதிக்கு விரைந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடந்த சோதனையில் விற்பனைக்காக சுமார் 1.5 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கீரிவிளையை சேர்ந்த ராஜபூபதி மகன் அரவிந்த் பிரியன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈத்தாமொழி போலீசார் அரவிந்த் பிரியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.