கருங்கல் அரசு மருத்துவமனை அருகே சாலையில் தேங்கும் மழைநீர் நோயாளிகள் அவதி
கருங்கல், ஆக. 7: கருங்கலில் இருந்து குறும்பனை செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கருங்கல் அரசு மருத்துவமனை உள்ளது. அதன் எதிர்ப்புறமாக சாலையின் இடது புறத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் சாலையின் பாதி அளவுக்கு சுமார் 150 மீட்டர் நீளத்துக்கு தண்ணீர் தேங்குகிறது. பல நாட்கள் தண்ணீர் வடியாமலும் நிற்கிறது. வடிந்த பின் பல நாள்கள் சகதியாக கிடக்கிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நடந்து, வாகனங்களில் வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளாலும் பலருக்கு ஆபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் சாலையை பயன்படுத்துவோருக்கும் பல விதங்களில் ஆபத்து உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதிக கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆவதால் டெங்கு காய்ச்சல் முதலான நோய்கள் பரவும் சூழ்நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.