கன்னியாகுமரியில் தேசிய ஊடக பயிலரங்கம் தொடக்கம் 8 நாட்கள் நடக்கிறது
கன்னியாகுமரி, டிச.6: கன்னியாகுமரியில் தேசிய அளவில் 8வது மாநிலங்களுக்கு இடையேயான அறிவுஜீவி ஊடக பயிலரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடக்கும் இந்த பயிலரங்கத்தில் முயற்சியிலிருந்து வெற்றிக்கு நேர்மறை சிந்தனையின் மதிப்பு என்ற தலைப்பில் விவேகானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கேந்திர மக்கள் தொடர்பு அலுவலர் சுனில் ராம் தொடங்கி வைத்தார்.
அரியானா மாநில சோனிபட் ஊடக கழகம் ஏற்பாடு செய்துள்ள இப்பயிலரங்கில் தகவல் பரிமாற்ற வளர்ச்சி, சமூகப் பொறுப்பு, மாநிலங்களுக்கிடைய ஒத்துழைப்பு, புதிய ஊடக சூழல் சவால்கள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு விருந்தினர்களாக சுனில் சிரமலூ, கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கின் முக்கியத்துவத்தை விளக்கினர். ஊடக கிளப் தலைவர் சுந்தர், துணைத்தலைவர் ராஜேஷ் காத்திரி, பொதுச்செயலாளர் சோம்பால் சைணி, இணைச் செயலாளர் சுக்பீர் சைணி, பொருளாளர் ஹரீஷ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடஇந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பங்கேற்ற ஊடகத்துறையினர் திறன் மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கிடைய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தளமாக இந்த பயிலரங்கம் அமையும் என கூறப்பட்டது.