தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம், ஆக. 6: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பாஜ சார்பில் குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழித்துறை அரசு மருத்துவமனை வெட்டுவெந்நியில் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் மற்றும் கழிப்பிடக் கழிவுநீர் வடிகால் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாஜ சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதைப்போல் குழித்துறை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இருந்து கழிவுநீர் ரோடு வழியாக பாய்ந்து வடிகாலில் சேருகிறது. கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை கண்டித்து குழித்துறை நகர பாஜ சார்பில் குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழித்துறை நகர பாஜ தலைவர் சுமன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நந்தினி, மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர், வக்கீல் பவுல் ராஜ், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜூ, ரத்தினமணி, மினி குமாரி, ஜெயந்தி, செல்வகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.