குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு பாலமோரில் 32 மி.மீ பதிவு
நாகர்கோவில், ஆக. 18: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பாலமோரில் அதிகபட்சமாக 32 மி.மீ மழை பதிவாகி இருந்தது.குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
மலையோர பகுதிகள் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இரவில் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2.1 மீட்டர் முதல் 2.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் சார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (18ம் தேதி) நள்ளிரவு வரை இந்தநிலை காணப்படும் என்று மஞ்சள் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 32.4 மி.மீ மழை பெய்திருந்தது. நாகர்கோவில் 5.2, கன்னிமார் 2.4, பூதப்பாண்டி 4.2, முக்கடல் 4, தக்கலை 5, குளச்சல் 11, இரணியல் 8.4, அடையாமடை 4, குருந்தன்கோடு 3, கோழிப்போர்விளை 12.6, மாம்பழத்துறையாறு 6, ஆனைக்கிடங்கு 5.2, சிற்றார்-1ல் 12.6, சிற்றார்-2ல் 10.2, களியல் 8, குழித்துறை 7.2, பேச்சிப்பாறை 13.4, பெருஞ்சாணி 10.2, புத்தன் அணை 8.8, சுருளோடு 20.4, திற்பரப்பில் 13 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.