திற்பரப்பு மகாதேவர் கோயில் சொத்து ஆக்ரமிப்பு : நீதிமன்ற உத்தரவுப்படி அளவீடு
குலசேகரம், செப். 3: குமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற பன்னிரண்டு சிவாலயங்களில் மூன்றாவதாக வருவது திற்பரப்பு மகாதேவர் கோயில். நூற்றாண்டுகள் பழமையான இக்கோயில், திற்பரப்பு அருவிக்கு அருகில், கோதையாற்றின் கரையில் அமைந்துள்ளது. அருவிக்கு செல்லும் பாதை மற்றும் அருவி பகுதி திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதையை தொட்டு தனியார் வசம் உள்ள கடைகள் உள்ளன. பாதையில் மற்றொரு பக்கத்தில் அறநிலையத்துறை வணிக வளாகம் அமைத்தபோது , நில உரிமை சம்பந்தமாக பிரச்னை எழுந்தது.
வருவாய் ஆவணங்கள் படி அளவீடு செய்து, குறிப்பிட்ட பாதை மற்றும் தனியார் வசம் உள்ள பகுதிகள் கோயிலுக்கு சொந்தமானது என அறநிலையத் துறையினர் தெரிவித்தனர். ஆனால் எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் அளவீடு செய்து எல்லை கல் பதிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்ட போது தனியார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். மீண்டும் மீண்டும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. இதனால் சொத்தின் உரிமை சம்பந்தமான பிரச்னைக்கு முடிவு எட்டாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் திற்பரப்பு பகுதியை சேர்ந்த டார்வின் பிரைட் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 2 வாரங்களுக்குள் அளவீடு செய்து ஆக்ரமிப்பு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.இதனையடுத்து நேற்று ஜிபிஎஸ் உதவியுடன் அளவிடும் பணி நடைபெற்றது. ஐயப்பன் தலைமையிலான அறநிலையத்துறை சர்வேயர் குழுவினர் அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதனை துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் துறை சர்வேயர் ஆல்பர்ட், அறநிலையத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணித்தனர். இது சம்பந்தமான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அளவீடு பணியின் போது குலசேகரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அளவீடு குறித்த தகவல் அறிந்து இந்து முன்னணியினர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.