அருமனையில் பரபரப்பு; அடகுவைத்த நகையை திருப்பி கேட்டு நிதி நிறுவனத்தில் பெண் திடீர் தர்ணா
அருமனை, செப்.2: அருமனை அருகே சூரகாட்டுவிளையை சேர்ந்தவர் அருள் கிறிஸ்டோபர். அவரது மனைவி ஜீனா (42). இவர் கடந்த பிப்ரவரி மாதம் நெடுங்குளம் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 4 கிராம் நகையை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜீனா அடகுவைத்த நகையை திருப்ப அட்டையுடன் சென்றுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தினர், உங்களுடைய நகை இங்கு இல்லை என்று கூறி உள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜீனா அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஜீனா மீண்டும் தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். பின்னர், தான் அடகு வைத்த நகையை திருப்பி தருமாறு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த அருமனை எஸ்.ஐ சுஜின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜீனா மற்றும் நிதிநிறுவன ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வருகிற வியாழக்கிழமை நகையை திருப்பி தருவதாக நிதி நிறுவன ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து ஜீனா போராட்டத்தை கைவிட்டார்.