நாகர்கோவிலில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 3 ஆண்டு ஜெயில்
நாகர்கோவில், நவ. 11: குமரி மாவட்டம் செண்பராமன்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (65). இவர் நாகராஜா கோயிலில் உள்ள காலணி பாதுகாப்பு அறையில், டோக்கன் வழங்கும் பணி செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு, ராமசுப்பு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நின்றார். அப்போது தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த 15வயது மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் வந்தனர். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி படித்தனர்.
ராமசுப்பு சிறுவர்களிடம் பேச்சுக்கொடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சிறுவர்களை அழைத்துசென்றார். அங்கு அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு படிப்பகத்திற்கு அந்த சிறுவர்களை அழைத்து சென்று, அங்கு வைத்து சிறுவர்களிடம் ராமசுப்பு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறுவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் ராமசுப்பு மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், ராமசுப்புக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.