குன்றத்தூர் நகராட்சி பகுதியில் அனைத்து சமூகத்தினரின் நிதி பங்களிப்புடன் அம்பேத்கர் வெண்கல சிலை அமைக்க ஏற்பாடு: கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம், செப்.2: அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், குன்றத்தூர் ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம், இந்திய கம்யூனிஸ்ட், தந்தை பெரியார் திராவிட கழகம், பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தனித்தொகுதி, குன்றத்தூர் ஒன்றியம், குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலை சிமெண்டால் அமைந்துள்ளது, இச்சிலை சுமார் 30- ஆண்டுகளுக்கு மேலாக சமூக ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
இச்சிலை சாலை விரிவாக்க பணி மேற்கொண்டதில் சற்று இடம் நகர்த்தப்பட்டு முழுவுருவ வெண்கல சிலையாக நிறுவ நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டது, அவ்வாறு அமையும் புதிய வெண்கல சிலைக்கு செலவினங்களில் அனைத்து சமூக மக்களும் தங்கள் சார்பில் நிதி பங்களிப்பை அளிக்க விரும்புகின்றனர். இது தொடர்பாக நகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்களை அனுகினோம். அவர்கள் 08.07.2025 அன்று ஒரு அமைதி பேச்சுவார்தை ஏற்பாடு செய்தனர்.
அக்கூட்டத்தில் திருவுருவ சிலை நிறுவ அனைத்து சமூக மக்கள் நிதி பங்களிப்பை ஏற்க மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்து தகவல் தெரிவிப்பதாக கூறினர். மேலும் இதுநாள் வரை எந்த தகவல் தெரிவிக்கவில்லை.
எனவே காஞ்சிபுரம் மாவட்ட வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 75க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைத்து சமூக மக்களின் நிதி பங்களிப்பை ஏற்று விரைவில் அம்பேத்கரின் உருவ வெண்கல அமைக்க ஏற்பாடு செய்யுமாறு மனு அளித்தனர்.