தாய், தந்தை இருவரும் வேறு திருமணம் செய்ததால் தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்த 6 வயது சிறுமி மர்மமான முறையில் பலி: போலீசார் விசாரணை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த குருவன்மேடு பகுதியை சேர்ந்தவர் வசம்பு. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் வினோதினி (6). இந்நிலையில், வசம்பு, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு சென்று விட்டார். இதையடுத்து லட்சுமியும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 2வது திருமணம் செய்து கொண்டு கணவருடன் சென்று விட்டார். இதனால், வினோதினி நிர்கதியாக இருந்தார். இதையடுத்து வேறு வழியின்றி தாத்தா வீடான வேங்கடமங்கலத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்து கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி தாசரி குன்னத்தூர் கிராமத்தில் உள்ள பாட்டியின் வீட்டில் வினோதினி இருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது திடீரென வாயில் இருந்து நுரை தள்ளியது. இதை பார்த்ததும் பாட்டியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வினோதினியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 27ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு சிறுமி மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் வினோதினி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.