காஞ்சிபுரம் அருகே பரபரப்பு தனியார் நிறுவன டிரைவர்களை கடத்தி கத்தி முனையில் ரூ.4.50 கோடி கொள்ளை: கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது மேலும் 12 பேருக்கு வலை
காஞ்சிபுரம், அக்.30: காஞ்சிபுரம் அருகே தனியார் கொரியர் நிறுவன டிரைவர்களை கடத்தி, கத்தி முனையில் மிரட்டி ரூ.4.50 கோடி கொள்ளையடித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் 12 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே போர்வலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாடின் (56). இவர், தனது சகோதரருடன் சேர்ந்து 2017ம் ஆண்டில் இருந்து கொரியர் நிறுவனம் நடத்தி, அதன் வாயிலாக கமிஷன் அடிப்படையில் நாடு முழுவதும் பணம் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் உள்ள லாக்கரில் ரூ.4.50 கோடி பணத்தை வைத்து, தங்கள் நிறுவனத்தின் ஓட்டுநர்களான பியூஸ் குமார், தேவேந்திர படேல் ஆகிய 2 பேர் மூலம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் அருகே காரில் டிரைவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, 3 கார்களில் வந்த 17 பேர் கொண்ட கும்பல், பல்வேறு பகுதிகளில் வழிமறிக்க முயன்று, காஞ்சிபுரம் ஆட்டுப்புத்தூர் அருகே காரை மடக்கி நிறுத்தினர்.
பின்னர், கத்தி முனையில் பியூஸ்குமார், தேவேந்திர படேல் ஆகியோர் பணத்துடன் வந்த காரை கடத்தி, ஆற்காடு அருகே சென்ற மர்ம நபர்கள், காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஓட்டுநர்கள் பியூஸ் குமார், தேவேந்திர படேல் ஆகியோரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால், பயந்துபோன 2 பேரும் இதுகுறித்து மும்பையில் உள்ள தங்கள் நிறுவன உரிமையாளர் ஜாடினிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக மும்பையில் இருந்து காஞ்சிபுரம் வந்த ஜாடின், இதுகுறித்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை கும்பல் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனால், கேரளா மாநிலம் சென்ற தனிப்படை போலீசார் பாலக்காடு, கொல்லம், திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த சந்தோஷ், சுஜிலால் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்தனர். இதில் இக்கொள்ளை சம்பவத்தில் மேலும் 12 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கைதான 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை உடனடி காவல் விசாரணைக்கு எடுத்து காவல் ஆய்வாளர்கள் அலெக்சாண்டர், சிவகுமார் தலைமையிலான போலீசார் மீண்டும் கேரளா அழைத்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள கொள்ளையர்களையும், பணத்தினை பறிமுதல் செய்யும் முயற்சியில் தனிப்படை போலீசார் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.