செங்கல்பட்டு இராட்டினங்கிணறு பேருந்து நிறுத்தத்தில் போதிய பயணியர் நிழற்குடை இல்லாமல் வெயிலில் தவிக்கும் மாணவ-மாணவிகள்
செங்கல்பட்டு, ஆக.30: செங்கல்பட்டில் உள்ள இராட்டினங்கிணறு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் போதிய பயணியர் நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக வெயிலில் மாணவ-மாணவிகள் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு இராட்டினங்கிணறு பகுதியில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர், சிங்கபெருமாள் கோயில், ஆத்தூர், திம்மாவரம், மதுராந்தகம், செய்யூர் மற்றும் இதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து இந்த அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இங்கு அதிக மாணவ-மாணவிகள் பயின்று வருவதால் இக்கல்லூரியில், சுழற்சி முறையில் இரண்டு ஷிஃப்ட்டுகளாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும், கல்லூரி முடிந்தபின் இராட்டினங்கிணறு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் போதிய நிழற்குடை இல்லாததால் மாணவிகள் துப்பட்டாவை கொண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கொளுத்தும் வெயிலில் பேருந்துக்காக காத்துக்கிடக்கும் அவல நிலையை காண முடிகிறது. இதில், அடிக்கும் வெயிலில் ஒதுங்கி நிற்க முடியாத நிலையும், மயங்கி விழும் சூழ்நிலையும் ஏற்படும் அச்ச நிலை உள்ளது. எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தில் போதிய நிழற்குடை அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழையில் நனைகிறோம்... வெயிலில் காய்கிறோம்...
செங்கல்பட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘காலையில் கல்லூரிக்கு சென்று மதியம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்போது, மாணவ-மாணவிகள் இரட்டினங்கிணறு பேருந்து நிறுத்தம் வருகிறோம். அங்கு ஒரே ஒரு பேருந்து நிழற்குடை என்பதால் ஏற்கனவே பேருந்து நிறுத்தம் வந்தவர்களுக்கே போதுமனதாக இல்லை. இதில், கல்லூரி முடிந்து வரும் பல நூறுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பேருந்து நிறுத்தத்தில் கொளுத்தும் வெளியில் நிற்கிறோம். அதேபோல், மழைக்காலம் என்றால் மழைநீர் நனைந்துபடி நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், உடல் நிலை சரியில்லாமல் போகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதலாக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு பேருந்து நிலைய வழியாக வரும் பேருந்துகள், இரட்டினக்கிணறு வழியாக மதுராந்தகம் திண்டிவனம் உள்ளிட்ட அதன் சுற்று வட்டா பகுதிகளுக்கு செல்கின்றன. அதேபோல், இரட்டினகிணறு நிறுத்தம் வழியாக கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்குழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிறுத்ததில் பொதுமக்களும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளும் இங்கிருந்து அவரவர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இவர்களுக்கு போதிய நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைந்து கூடுதல் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.