காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 76 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம், அக்.29: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 76 ஏரிகள் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் தாமல் மதகு ஏரி, தாமல் சக்கரவர்த்தி தாங்கள், தைப்பாக்கம் ஏரி, கூரம்சித்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, திருப்புப்குழி ஏரி, திருப்பூலிவனம் ஏரி, இளநகர் ஏரி, அனுமன் தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, காவனூர் புதுச்சேரி ஏரி, மருத்துவம் பாடி ஏரி, கோவிந்தா வாடி பெரிய ஏரி, மருத்துவம் பாடி உள்ளிட்ட 69 சிறிய ஏரிகளும், பெரிய ஏரிகளான தாமல், உத்திரமேரூர் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் உத்திரமேரூர் ஒன்றியத்தில் 2 ஏரிகள், குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒரு ஏரி, வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒரு ஏரி என மொத்தம் 5 ஏரிகள் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இதில், தொடர் மழை காரணமாக மேற்கூறிய 76 ஏரிகள் 100 சதவீதமும், 58 ஏரிகள் 75 சதவீதமும், 136 ஏரிகள் 50 சதவீதமும், 108 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.