சிங்கப்பெருமாள்கோவில் அருகே பயங்கரம் மதுபோதை தகராறில் வாலிபர் வெட்டி கொலை: நண்பர்கள் 4 பேர் கைது
செங்கல்பட்டு, நவ.28: சிங்கப்பெருமாள்கோவில் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே தென்மேல்பாக்கம் காச்சேரிமங்கலம் ஏரி உள்ளது. இந்நிலையில், தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த ஏரி வழியாக நேற்று காலை சென்றபோது ஏரி அருகே கொடூரமாக முகத்தில் வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் தலைமையில் மறைமலைநகர், செங்கல்பட்டு தாலுகா, சிங்கபெருமாள்கோவில் காவல்நிலைய போலீசார் என 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். பின்னர் வாலிபர் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? இவர் எதற்காக இரவு நேரத்தில் இங்கு வந்தார், நண்பர்களோடு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா, முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கத்தோடு இந்த பகுதிக்கு அழைத்து வந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, ஆலந்தூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் தாம்பரம் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாநரக காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் இறந்தவர் செங்கல்பட்டு பரனூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஊரப்பாக்கம் பகுதியில் சாலையோர தள்ளுவண்டி பிரியாணி கடையை நடத்தி வந்த முத்துவீரா (25), விக்கி (24), மாரியப்பன் (25) உள்ளிட்ட 4 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இவர்களும், கொலை செய்யப்பட்ட ஆகாஷும் நண்பர்கள் ஆவர். (24). இவர்கள் அனைவரும் சேர்ந்து கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் 5 பேரும் காச்சேரிமங்கலம் ஏரி பகுதியில் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் போதை தலைக்கு ஏறிய நிலையில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி ஆகாஷை வெட்டி கொலை செய்ததை வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.