திருப்போரூரில் எஸ்ஐஆர் பணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திருப்போரூர், நவ.27: திருப்போரூர் தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் ஆய்வு செய்தார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களிடம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் படிவங்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு, வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெற்று, இணையதளத்தில் பதிவேற்றும் பணி திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியை செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள படிவங்களை உடனடியாக பெற்று இணையதளத்தில் பதிவேற்றிட வேண்டும் என்றும், இப்பணியில் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஈடுபடுத்தி விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் பிரிவு கூடுதல் வட்டாட்சியர் முருகலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.