பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
காஞ்சிபுரம், செப்.27: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டம் நடத்திட மாநில தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், 150க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஒன்று திரண்டனர்.
அவர்கள், திட்ட முகாம்களினால் பனிச்சுமை அதிகரிப்பதாகவும், கால அவகாசம் கூட வழங்காமல் இரவோடு இரவாக பணிகளை முடிக்க நிர்பந்திப்பது அலுவலர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது எனக்கூறி, திட்ட பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகரன், நவீன்குமார், பாலாஜி, வெங்கடேசன், ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் கோவர்த்தனன், கூட்டமைப்பு நிர்வாகிகள் லெனின், துரை மருதன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.