ஒரு ரூபாய் நாணய வடிவில் அருகம்புல்லால் தீட்டிய இலை வடிவ விநாயகர்: காஞ்சி ஓவியர் சாதனை
காஞ்சிபுரம், ஆக.27: ஆய கலைகளுள் ஒன்றான ஓவியக்கலை உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதுடன், உணர்வுகளை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. காட்சிகள் ஓவியரின் கை வண்ணத்தில் புதிய வடிவத்தையும், துல்லியமான உணர்வையும் வெளிப்படுத்துகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் அடுத்து ஐய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஓவியரான பா.சங்கர், பல்வேறு வித்தியாசமான ஓவியங்களை வரைந்து வருகிறார். அந்த வகையில், கடந்த காலங்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது நடந்த உற்சவங்களை புகைப்படங்களாக தினம்தோறும் காலை, மாலை என இருவேளையும் சேகரித்து, அடுத்த 2, 3 மணி நேரத்தில் நீர் வண்ண ஓவியங்களாக மிக அழகாகவும், நுணுக்கமாகவும் வரைந்து அசத்தினார்.
தொடர்ந்து காமராஜரின் பிறப்பு முதல் இறப்பு வரை சாதனைகளை உள்ள டக்கி ஒரே ஓவியத்தில் தீட்டியுள்ளார். 100 இந்திய படங்களை ஒரே வரை படமாக வரைந்துள்ளார். உலகப்புலிகள் தினத்தை முன்னிட்டு, 2 செமீ அளவில் புலி படத்தையும், வ.உ.சிதம்பரனார், கிருஷ்ணர், விநாயகர் உருவங்களை வரைந்து அசத்தியுள்ளார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அருகம்புல்லால் ஒரு ரூபாய் நாணய அளவில் இலைவடிவ விநாயகர் வரைந்துள்ளார். இது, நீர் வண்ண ஓவியம். இந்த ஓவியம் பிரஷ் உபயோகிக்காமல் முழுதும் அருகம்புல்லாலே வரைந்த ஓவியம் ஆகும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆன்மீக விழிப்புணர்வாக வரைந்த இந்த ஓவியம் நாணய அளவில் வரையப்பட்ட ஓவியம் வரைந்துள்ளார் . இதுபோல் சமூக விழிப்புணர்வு, நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் ஓவியங்களை வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.