பெரும்புதூர் அருகே பயங்கரம் தலையில் வெட்டி வாலிபர் கொலை
பெரும்புதூர், நவ.26: பெரும்புதூர் அருகே தலையில் வெட்டி ஒரு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்புதூர் நகராட்சி அலுவலகம் அருகில், வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனையிட்டபோது, இறந்த நபர் காக்கி கலர் பேன்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டு காயங்கள் இருப்பதால், அவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதை போலீசார்உறுதிப்படுத்தி உள்ளனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்திவு செய்த போலீசார், இறந்தவர் யார், இவரை கொலை செய்தவர்கள் யார், வழிப்பறியில் ஈடுபடும்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் யார் என்று தெரிந்த பிறகுதான் கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.