தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் அடைப்பு
காஞ்சிபுரம், நவ.26: காஞ்சிபுரத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் அடுத்த சதாவரம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் கணபதி (24). இவர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், கணபதி ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். எஸ்பி பரிந்துரையை ஏற்று, கலெக்டர் கலைச்செல்வி மோகன், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கணபதியை ஓராண்டு தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி கணபதியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.