மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
காஞ்சிபுரம், நவ.26: காஞ்சிபுரம் அருகே வீட்டில் மின் பழுதை சரிசெய்தபோது, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் அடுத்த தைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் என்பவரின் மகன் கார்த்திகேயன் (28). இவருக்கு, திருமணமாகி துர்கா தேவி (19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தைப்பாக்கம் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் மின் பழுதை சரிசெய்யும் வேலையில் எலக்ட்ரீஷியன் கார்த்திகேயன் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், உயிரிழந்த கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.