நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகள் தீவிரம் கடந்த 3 மாதத்தில் வேகமாக உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்: நிலப்பரப்புகளை நீர்பரப்புகளாக மாற்றும் சென்னை மாநகராட்சி
பெருங்குடி, ஆக.23: சென்னை மாநகராட்சி மிகவும் வளர்ந்த நகரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருப்பதாக சென்னை மாநகராட்சியில் அனைத்து வித அடிப்படை வசதிகளையும், செய்து தரவேண்டிய கட்டாயம் உள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதும், குடங்களுடன் குடிநீருக்காக மக்கள் அலைவதும் கடந்த காலங்களில் அரங்கேறிய வழக்கமான சம்பவங்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்து போய்விட்டதால் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சென்னைவாசிகள் எதிர்கொண்டனர்.
அப்போது மாற்று ஏற்பாடுகள் மூலம் மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் தண்ணீரை வழங்கியது. அப்படி இருந்தும் புழங்குவதற்கு தண்ணீர் இல்லாமல் சென்னை வாசிகள் தவித்தது இன்று வரை மறக்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம். ஆனால் அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் பெய்து வரும் பருவமழையால் தற்போது வரை சென்னையை பொறுத்தவரை கோடையிலும் தண்ணீர் பிரச்னை வரவில்லை. சென்னைக்கு ஆதாரமாக விளங்கும் குடிநீர் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, சோழவரம் ஏரி ஆகிய 5 ஏரிகளில் கோடை காலத்திலும் தண்ணீர் குறையாமல் இருந்து வருவதால் தண்ணீர் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் போதிய அளவு மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் பெரிய அளவில் குறையவில்லை. இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை என்ற நிலை இதுவரை இல்லை என்பது மன ஆறுதலை தருவதாக உள்ளது.
அதாவது, சென்னை மாநகராட்சியின் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும். அதற்காக 200 வார்டுகளிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் ஜூன் மாதத்தில் வழக்கமாக 6.6 செ.மீ. மழை பெய்யும். 2024 ஜூனில் 200 சதவீதம் அதிகரித்து 20 செ.மீ. மழை பெய்தது. செப்டம்பர் 30 வரை வழக்கத்தைவிட அதிக நாட்கள் மிதமான மழை பொழிவாக இருந்தது. இதனால் மற்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்தாலும் இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது.
மேலும் பல்வேறு தேவைகளுக்காக அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் சென்னை மாநகராட்சி பகுதிகளிலம் நிலத்தடி நீர் வேகமாக சரிந்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது இந்த ஆண்டு, கடந்த 3 மாதத்துக்கு முன்பு 16 அடி வரை நிலத்தடி நீர் குறைந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில், கடந்த மே மாதம் வரையிலான காலகட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பது எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. இதற்கு ஆழ்துளைக் கிணறுகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகள் நீரை அளவின்றி பயன்படுத்துவது முக்கிய காரணங்களாக உள்ளன.
சென்னையை பொறுத்தவரை ஏறத்தாழ எல்லா வீடுகளிலும் இப்போது ஆழ்துளை கிணறுகளை அமைக்க தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்ல, பல மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் குறைந்தது 200க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால், அந்த வீடுகளுக்கு எல்லாம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. மேலும் சிறு சிறு கிணறுகளும் தோண்டப்படுகிறது. அதுமட்டுமல்ல, சென்னையில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால் அவைகள் அளவில்லாமல் நீரை பயன்படுத்துகின்றன. இதுபோன்ற காரணங்களால், சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனை சமாளிக்க தற்போது தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. அதாவது கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்படி செய்வதன் மூலம் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், தென் சென்னையின் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் கடந்த 19ம் தேதி நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், கிண்டி ரேஸ் கிளப்பில் மீட்கட்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பை எவ்வாறு ஒரு முழுமையான நீராதாரமாக மாற்றலாம் என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதுமட்டுமல்ல, சென்னை மாநகராட்சி 2025-26ம் ஆண்டில் ரூ.119.12 கோடி செலவில் 41 குளங்களை புதுப்பிக்க உள்ளது.
பருவ மழையின் போது வெள்ளத்தை குறைக்கவும், நீர் சேமிப்பை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குளங்களை ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெறும். ஏற்கனவே சென்னை மாநகராட்சி தனது மூலதன நிதியில் இருந்து ரூ.25.25 கோடி செலவில் பல்வேறு குளங்களை புதுப்பித்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு பல குளங்களை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மழைநீர் தேங்குவது குறையும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதற்காக நிறைய பணம் செலவு செய்யப்படுகிறது. சென்னையில் நீர்மட்டத்தை அதிகப்படுத்த எடுக்கப்படும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், மே மாதத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த 3 மாதங்களில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பாராத வகையில் வேகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. குளங்களை ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், கொள்ளளவை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. தனித்தனியாக, சென்னை மாநகராட்சியின் நிதியின் ஏற்கனவே 5 குளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு குறையும் குளங்கள் புதுப்பிக்கப்படுவதால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பணிகளை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மழை காலங்களில் தண்ணீரை சேமிக்கவும் இது மிகவும் உதவும்.
மேலும், கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பை, நீர்ப்பரப்பாக மாற்றுவதன் மூலமும் தென்சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க முடியும். சென்னையின் நீர்மட்டத்தை உயர்த்த இப்படி பல திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. மே மாதத்துக்கு முந்தைய 3 மாதங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. தற்போது கடைசியாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர். ‘‘சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனை சமாளிக்க தற்போது தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. அதாவது கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.