சுங்குவார்சத்திரத்தில் பட்டப்பகலில் பரபரப்பு கார் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை : உரிமையாளர் விரட்டியதால் பணத்தை வீசிய ஆசாமிகள்
பெரும்புதூர், ஆக.23: சுங்குவார்சத்திரத்தில் கார் கண்ணாடி உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடித்து பைக்கில் தப்பிச்சென்றபோது, உரிமையாளர் விரட்டிச் சென்றதால் பணத்தை வீசிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர், பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்ய காரில் வந்துள்ளார். அப்போது, சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, ஜெராக்ஸ் எடுப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட 2 வாலிபர்கள் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு பைக்கில் தப்பினர். இதை கண்ட உரிமையாளர், கொள்ளையர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று பிடிக்க முயன்றார். இதனால், கொள்ளையர்கள் பணத்தை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்கள் ரூ.20 லட்சம் பணத்துடன் தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி நபர் ஒருவர் நின்றிருந்த நிலையில், மற்றொரு நபர் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடுவதும், உரிமையாளர், திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்படுவதும், கொள்ளையர்கள் பணத்தை சாலையில் வீசிவிட்டு தப்பிச் செல்வதும் அதில் பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.