இளநிலை பொறியாளர் தற்கொலை வழக்கு பணிமனை கிளை மேலாளர் உள்பட இருவருக்கு வலை
தாம்பரம், நவ.21: தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக இளநிலை பொறியாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவான பணிமனை கிளை மேலாளர் மற்றும் எச்ஆர்டி பெண் அலுவலர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, ஆதனூர் ஜவகர் ஐயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (40). இவர் தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு காட்டாங்கொளத்துார் - பொத்தேரி இடையே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் யுவராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு மரண வாக்குமூலமாக இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது. அதில் அவரது தற்கொலைக்கு பணிமனை கிளை மேலாளர் கோவிந்தராஜ், எச்ஆர்டி சொர்ணலதா ஆகிய இருவர்தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மேற்கண்ட இருவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.