குப்பை கழிவுகளை கொட்டியபோது திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி: பல்லாவரம் அருகே பரபரப்பு
பல்லாவரம், ஆக.21: பல்லாவரம் அருகே திருநீர்மலையில் குப்பை கொட்டும் இடத்தில், குப்பை கழிவுகளை கொட்டியபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலம்பாக்கம், சத்யா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ஜான் பாஷா (33). இவர், தனக்கு சொந்தமாக லாரி மூலம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படி அகற்றப்படும் கழிவுகளை அரசு நெறி காட்டுதல் மூலம் முறையாக அப்புறப்படுத்தாமல், லாரியில் குப்பையை தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டு செல்லாமல், திறந்த நிலையிலேயே திருநீர்மலை குப்பைமேடு பகுதியில் கொட்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலையும் வழக்கம்போல் அனகாபுத்தூரில் இருந்து திருநீர்மலை செல்லும் குவாரி சாலையில் உள்ள குப்பைமேடு அருகில் லாரியில் இருந்த குப்பையை கொட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நிறுத்தி வைத்திருந்த லாரியில் இருந்து திடீரென குபுகுபுவென கரும் புகை வந்தது. இதை கண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தபோது, காற்றின் மூலம் அருகில் இருந்த லாரியிலும் தீப்பற்றிக் கொண்டது தெரியவந்தது. இதனிடையே, இதுபோன்று குப்பை கழிவுகளை அஜாக்கிரதையாக திறந்த வெளியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் லாரியில் கொண்டு வந்து கொட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.