கணவனை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் மனைவி, தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் உட்பட 5 பேர் கைது
பெரும்புதூர், ஆக.20: பெரும்பெரும்புதூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் மனைவி, தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47). இவரது, மனைவி பவானி (38). இருவரும் அதே பகுதியில் பேரம்பாக்கம் - தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளனர். இந்த, கடையில் திருவாரூரை சேர்ந்த மதன்ராஜ் (36) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிரியாணி மாஸ்டர் மதன்ராஜ்க்கும், பவானிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஹரி கிருஷ்ணனை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி, மதன்ராஜ் கூலிப்படைகளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் பைக்கில் சென்றபோது, கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில், அதிர்ஷ்டவசமாக ஹரிகிருஷ்ணன் உயிர் தப்பினார். அதிர்ச்சியடைந்த, ஹரிகிருஷ்ணன் இதுகுறித்து பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி பவானியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கள்ளக்காதலன் மதன்ராஜ், கூலிப்படை தலைவன் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விஜய், விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.