செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
குன்றத்தூர், நவ.18: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடந்த சில தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து திடீரென சென்னை புறநகர் பகுதிகளில் லேசான சாரலுடன் மழை பெய்து வருகிறது. அத்துடன், நேற்று காலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து 100 கன அடியாக மட்டுமே உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த உயரம் 24 அடியில் தண்ணீர் 21.39 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி நீரில், தற்போது 2,957 மில்லியன் கன அடியும் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள சிறுசிறு ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து அவை நிறைந்து காணப்படுவதாலும், வரக்கூடிய நாட்களில் மழையின் அளவு கூடுதலாக பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி, ஏரியில் இருந்து உபரிநீர் படிப்படியாக அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த, 14ம் தேதி ஏரியிலிருந்து 600 கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு அதனை உயர்த்தி 1,200 கன அடி உபரி நீரை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், அனகாபுத்தூர், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்து விடப்பட்டு வருவதால், அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நேரத்தில், ஏரியிலிருந்து கூடுதலாக உபரிநீர் திறப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.