ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம், செப்.17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 19 ஆண் பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மண்டல தளபதி, ஊர்க்காவல் படை அலுவலகம், தாலுகா அலுவலக வளாகம், காமராஜர் தெரு, காஞ்சிபுரம் - 631501 என்ற முகவரியில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி கல்வித் தகுதியுடன் சேவை மனப்பான்மை உடையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 1.9.2025 அன்று 18 வயது முடிவு பெற்றவராகவும், 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவராகவும், மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் இவ்வமைப்பில் ஈடுபாட்டுடன் பணிபுரிபவர்களாகவும், பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், ஊர்க்காவல் படையில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் கிடையாது. ஒரு அழைப்புப் படிக்கு ரூ.280 வீதம் மாதம் 10 அழைப்புப் படியாக ரூ.2800 வழங்கப்படும். 45 நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (செப்.18) வரை மட்டுமே விநியோகிக்கப்படும். விண்ணப்பங்கள் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.